Mar 17, 2013

பரதேசி - பாலா செய்த மாபெரும் தவறு


எனக்கு பாலா படங்களில் “சேது”, “நந்தா” தான் பிடித்த படங்கள். பிதாமகன் பிடித்திருந்தாலும் அதன் க்ளைமாக்ஸும், வன்முறையும் பிடிக்கவில்லை. அதே போல “நான்கடவுள்” படத்தின் களம் முற்றிலும் புதிதாக இருந்தாலும், இப்படியொரு உலகம் இருக்கிறதா என வேதனைப்பட வைத்தாலும் அதிலும் தேவையே இல்லாமல் வன்முறையை நுழைத்து தன் முத்திரையைப் பதித்திருப்பார். “அவன் இவன்” காமெடியின் இன்னொரு பக்கத்தைக் காண்பித்திருந்தாலும் சொதப்பலான திரைக்கதை, நம்ப முடியாத, திணிக்கப்பட்ட வன்முறைக் காட்சிகளால் பிடிக்காமல் போய்விட்டது. கடைசியாக இப்போது “பரதேசி”.

இவர் எடுத்த படங்களிலேயே இதுதான் இவரது சிறந்த படம் என்று நான் நினைக்கிறேன். மற்ற படங்களில் இருக்கும் அதீத வன்முறை இதில் இல்லை. ஆனால் அவற்றை விடவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி சென்றால் ஒரு நல்ல கலைப் படைப்பை ரசித்த அனுபவம் ஏற்படும். இந்தப் படத்தில் 2010ல் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் “நாஞ்சில் நாடன்” உடன் இணைந்து பணியாற்றியுள்ளார் பாலா. “ரெட் டீ” என்ற நாவலை (தமிழில் “எரியும் பனிக்காடு”) இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு கதையை உருவாக்கியுள்ளார். 1940களில் தமிழகத்தில் வாழ்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளிகளின் வாழ்க்கை தான் களம்.


1939ம் ஆண்டு சாலூர் என்ற சிறிய கிராமத்தில் ஆரம்பிக்கும் கதை 1945ல் தேயிலைத்தோட்டத்தில் முடிகிறது. சாலூரில் வசிக்கும் ராசாவும் (அதர்வா) அவனைக் காதலிக்கும் அங்கம்மாவும் (வேதிகா) என படத்தின் முற்பாதியை கலகலப்பாகவே கொண்டுசென்றிருக்கிறார் பாலா. அதிலும் ராசாவின் பாட்டி வரும் ஒவ்வொரு சீனிலும் தியேட்டர் சிரிப்பலையில் மிதக்கிறது. அதர்வா “இப்பலாம் எனக்கு கனாவுல அங்கம்மாதான் தெரியறா” எனக்கூற அதற்கு அந்தப் பாட்டி “எனக்கு கனாவுல நீங்க ரெண்டு பேரும் பிச்சை எடுக்கற மாதிரிதான் தெரியுது” என கலாய்க்கும் இடம் உண்மையிலேயே சந்தானத்தின் பாட்டியாக இருப்பாரோ எனும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


ராசாவும் அங்கம்மாவும் “நினைத்துக் கொள்வதில்” ஆரம்பித்து நெருங்கிப்பழகுவதில் முடிகின்றனர். இவர்கள் “நினைத்துக் கொள்ளும்” விஷயம் அங்கம்மாவின் அம்மாவிற்கு தெரிய வர அவர் ‘ஒட்டுப்பெறக்கி’யாக சுத்தித்திரியும் ராசாவுக்கு தன் பெண்ணைக் கட்டித்தர முடியாது’ என பஞ்சாயத்தைக் கூட்டுகின்றார். அங்கே இனிமேல் என் பெண்ணை நினைக்க மாட்டேன் என கற்பூரத்தின் மேல் சத்தியம் பண்ணித்தர சொல்லும் போது ராசாவின் பாட்டி இடையில் புகுந்து கற்பூரத்தை அணைத்து “சத்தியம்லாம் பண்ணியாச்சு..ம்ம்..ம்ம்..போங்கடா” எனும்போது அவரின் புத்திசாலித்தனம் மிளிர்கிறது. மற்ற எவரையும் விட அந்தப் பாட்டியின் பாத்திரப் படைப்பு மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.


உள்ளூரில்தான் வேலையில்லை என்று பக்கத்து ஊருக்குச் சென்று ராசா, நாள் முழுதும் ஒரு கடையில் மரம் வெட்டும் வேலை பார்க்க, கடைக்காரர் அதற்குண்டான கூலியைக் கொடுக்காமல் “ஆசையப் பாரு..கூலி வேணுமாம்ல கூலி” என்று பெரிய கம்பால் ராசாவை நையப்புடைக்கிறார். நம்மை அடிமைப்படுத்தியவன் வெள்ளைக்காரன் மட்டுமல்ல, ஏழைகளின் உழைப்பில் உண்டு கொழுத்த உள்ளூர்க்காரனும்தான் என்பதை சாட்டையடியாய் சொல்லியிருக்கிறார். அப்போது அங்கு வரும் ‘கங்காணி’, “உள்ளூரிலேயே கிடந்து எதற்கு கஷ்டப்பட வேண்டும். வேலைக்குத் தக்கன கூலி, தங்க வீடு, சாப்பாடு, குடிக்க சாராயம்” என ஆசை வார்த்தைகள் கூறி தேயிலைத்தோட்டத்தில் வேலை பார்ப்பதற்காக அவ்வூர் மக்களை அழைத்துச் செல்கின்றான்.

“செங்காடே” எனும் பாடல் தொடங்க ஊர் மக்கள் அனைவரும் கிளம்பும் அந்தக் காட்சி மாண்டேஜுகளாய் நம் கண் முன் விரிகிறது. ராசாவும் அவர்களுடன் கிளம்புகின்றான். அங்கம்மா கிராமத்திலேயே இருந்து விடுகிறாள். இந்தப் பாடலின் வரிகள் ஒவ்வொன்றும், அவ்வூர் மக்கள் தேயிலைத் தோட்டத்தில் அனுபவிக்கப் போகும் கொடுமையை முன்னேயே சொல்லி நம்மை அப்படியே உலுக்குகின்றன. கிட்டத்தட்ட 48 நாட்கள் நடைப்பயணமாகவே நடந்து சென்று தேயிலைத்தோட்டத்தை அடையும் தருவாயில் பசி,வெயில் கொடுமையால் ஒருவன் மயக்கம் போட்டு விடுகின்றான். “அவனை இனிமேல் காப்பாற்ற முடியாது. குழி தோண்டிப் புதைக்கவும் நேரமில்லை” என்று அப்படியே விட்டு விட்டு, கதறுகின்ற அவனது மனைவியைத் தரதரவென்று மண்ணோடு இழுத்துச் செல்கின்றான் கங்காணியும் அவனது ஆட்களும். செத்துப் போய்விட்டதாக நினைத்த அந்த மனிதன் குற்றுயிரும் குலையுயுருமாய் தவித்து தன் கையை மெல்ல உயர்த்தும் அந்தக் காட்சியில் ஆரம்பிக்கும் அதிர்ச்சி அதற்குப் பின்பு அவர்கள் அனுபவிக்கப்போகும் கொடுமைகளுக்கு முன்னோடியாக அமைந்து நம் கண்களை குளமாக்குகிறது.

இதற்குப் பிறகு நடக்கும் காட்சிகளனைத்தும் சொல்லிப் புரியவைக்க முடியாது. திரையில் கண்டு உணர்ந்து கொள்ளுங்கள். பாலா முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தப் படத்துக்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறார் என்பதைப் படம் பார்க்கும்போது உணர முடிகிறது. முதல் 20 நிமிடத்திலேயே சாலூரின் வாழ்க்கைமுறை நமக்கு நன்றாக விளங்கி விடுகிறது. அதிலும் முதல் 5 நிமிடம் எனக்கு அந்த வட்டார வழக்கு பிடிபடவே இல்லை. அதற்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து நானும் அந்த மக்களோடு மக்களாகக் கலந்து விட்டேன். நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கை அப்படியே தனது வசனத்தில் கொண்டு வந்திருக்கிறார் நாஞ்சில் நாடன்.

“நியாஆஆஆஆயமாஆஆஆரேஏஏஏஏஏஏ” என்று கொட்டடித்துக்கொண்டே அறிமுகமாகும் அதர்வா அப்படியே ஒட்டுப்பெறக்கி (என்ற) ராசாவாகவே வாழ்ந்துள்ளார். “ராசா வண்டிய விட்டுருவேன்” என்று கூறும்போது அவரது வெகுளித்தனமும் அதே வசனத்தை கல்யாணப்பந்தியில் சாப்பாடு போடாத போது கண்கலங்கிக்கொண்டே கூறும்போது அவரது ஏமாற்றமும் வெளிப்பட்டு நடிப்பில் மிரள வைக்கிறார். “ராசாக்குப் பசிக்குதில்லா” எனும்போது நமக்கு அந்த ஏமாற்றத்தின் வலி புரிந்து நம்மையும் அழ வைக்கிறார்.



நாஞ்சில் நாடனின் “இடாலாக்குடி ராசா” சிறுகதையில் வரும் ராசாவை அப்படியே பிரதிபலிக்கிறார் அதர்வா. படம் முழுக்க கோணியால் ஆன ஒரு சட்டையைப்போட்டுக்கொண்டு வருகிறார். கடைசிக்காட்சியில் கதறும்போது நம் ஒட்டுமொத்த அனுதாபத்தையும் அப்படியே அள்ளிக்கொள்கிறார். தேசிய விருது வாங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு இன்னொரு நல்ல நடிகர் கிடைத்ததற்காக நாம் பாலாவை தான் பாராட்ட வேண்டும். 

வேதிகா துடுக்குத்தனமான “அங்கம்மா”வாக வந்து மனதைக் கொள்ளை கொள்கிறார். அழகான வேதிகாவுக்கு கருப்பு பெயிண்ட் அடித்து அங்கம்மாவாக மாற்றியிருக்கிறார்கள். நடிப்பிலும் வெகுவாக முன்னேறியிருக்கிறார். தன்ஷிகா கனமான ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது போக “கங்காணி” ஜெர்ரி, “போலி மருத்துவர்” சுப்ரமணியபுரம் சித்தன், போலி சாமியார், ராசாவின் பெரியப்பா, அதுபோக அந்த ஊர்மக்களாக நடித்திருக்கும் 200 பேர் என ஒவ்வொருவரும் இந்தப் படத்தின் கருத்தாழம் அறிந்து நன்றாக நடித்திருக்கின்றனர்.

படத்தின் மற்றொரு பெரிய பலம் ஒளிப்பதிவு. சாலூர் கிராமத்தின் வீதிகளைக் காண்பித்த படியே கேமரா பயணிக்கும் அந்த முதல் காட்சியிலேயே அந்தக் கிராமத்தின் அழகைக் கண் முன் நிறுத்தி விடுகின்றார் ஒளிப்பதிவாளர் செழியன். அங்கு ஆரம்பிக்கும் அவரது அதகளம் கடைசிக்காட்சியில் 360 டிகிரி கோணத்தில் தேயிலைத்தோட்டத்தைச் சுற்றிக் காண்பித்து அதர்வாவின் அலறலைக் காண்பிக்கும் போது தான் முடிகிறது. கதையோடு நம்மை ஒன்றுவதில் ஒளிப்பதிவு மாபெரும் பங்கு வகிக்கிறது. முதல் பாதியில் செபியா டோனும் இரண்டாம் பாதியில் கரும்பச்சை டோனும் கலந்து ஒளிப்பதிவியிருக்கிறார்.

கலை இயக்குனர் ஒவ்வொரு காட்சிக்கும் தேவையானதை நிறைவாக செய்திருக்கிறார். 1940 களைக் கொண்டு வர நிறைய உழைத்திருக்கிறார். குறிப்பாக போலி வைத்தியரின் ஒற்றைக் கண்ணாடி, உடைகள், குடிசைகள், அந்தக்கால கல்யாணம், வாழையிலைக்குப் பதில் அரச இலை, தண்ணீர் வைக்க கொட்டாங்கச்சி, கூழ் குடிக்க பழைய மண்பாத்திரம் என கூர்ந்து கவனித்து வேலை செய்திருக்கிறார்.

இவ்வளவு அருமையான படத்தில் குறைகள் ?? கண்டிப்பாக இருக்கின்றன. பாலா செய்த மாபெரும் தவறு படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷை பணித்தது தான். பாடல்களில் கூட இசை ஏதோ பரவாயில்லை. ஆனால் பிண்ணனி இசையில் கந்தரகோளப் படுத்தியிருக்கிறார். . படத்தின் பல காட்சிகளில் பிண்ணனி இசை தனியாகத் துருத்திக்கொண்டு தெரிகிறது. சில காட்சிகளில் மனதைப் பிழியும் காட்சியமைப்பு இருந்தும் பிண்ணனி இசையால் அதன் தாக்கம் குறைந்துபோய் விடுகிறது. 

இதற்கு முன்பு “நீதானே என் பொன்வசந்தம்” பதிவில் இளையராஜாவைப் பற்றி கொஞ்சம் தரக்குறைவாக எழுதியிருந்தேன். இப்படிப்பட்ட காதல் படத்திற்கு ஏ.ஆர். தான் சரியாக இருப்பார் என கூறியிருந்தேன். இப்போது “பரதேசி” படம் பார்க்கும் போதும் அதே போன்றதொரு உணர்வு தோன்றியதை மறுக்க முடியவில்லை. இளையராஜா இருந்திருந்தால் “பரதேசியின்” தாக்கம் அப்படியே நம் மனதின் ஆழத்தில் பாய்ந்திருக்கும். அவரது பிண்ணனி இசையின் வீரியம் அப்படி. ஒவ்வொரு நிமிடமும் இந்த எண்ணம் தோன்றி படத்தின் திருஷ்டியாக அமைந்துவிட்டது ஜி.வி.யின் பிண்ணனி இசை. என்ன பாலா சார்..!! இளையராஜா இல்லாட்டியும் அட்லீஸ்ட் யுவனையாவது புக் பண்ணிருக்கலாம்.!! படம் இன்னும் பெரிய அளவில வந்திருக்கும். இப்போ பாதிக்கிணறு தான்.



படத்தின் இரண்டாம் பாதியில் வரும் அந்த “தன்னைத்தானே” பாடல் படத்தின் போக்குக்கு சற்று வேகத்தடையாக அமைகிறது. ஆனால் ‘ஆங்கிலேயன் வந்தது கிறித்துவத்தைப் பரப்புவதற்கு தான்’ எனும் சுடும் உண்மையைப் பதிவு செய்கிறது. சில காட்சிகளில் பிளாக் காமெடி வகை வசனங்கள் இருக்கும். மறைமுகமாக கிண்டல் செய்யப்படும் அந்த இடங்கள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக வைத்தியம் பார்க்கிறேன் பேர்வழி என்று கிறித்துவத்தைப் பரப்பும் அந்த ‘உண்மையான’ (!!??) டாக்டரின் கதாபாத்திர அமைப்பு.



படத்தின் இரண்டாம் பாதியின் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு தனி பதிவே எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் சொல்லி திரையில் காணும் அந்த அனுபவத்தைக் குலைக்க விரும்பவில்லை. இந்த மாதிரியான ஒரு அனுபவத்தை பாலாவால் மட்டுமே தர முடியும் என்பது உறுதி. மற்ற பாலா படங்கள் போல, இந்தப் படத்தின் க்ளைமாக்ஸிலும் வெறித்தனமான ஒரு சண்டையையோ, வன்முறையையோ வைக்காமல் யதார்த்தமான, மனதைப் பிழிகிற ஒரு முடிவை வைத்துள்ளார். இந்த முடிவுக்காகவே இந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடித்தது எனலாம். நாவலை அடிப்படையாக வைத்து எடுத்திருந்தாலும் இந்தப்படத்துக்காக பாலா எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்திருப்பார் என்பதை நினைக்கும்போது மலைப்பாக இருக்கிறது. அதுவும் 1940 களின் வாழ்க்கையை அப்படியே திரையில் கொண்டுவருவதென்பது அவ்வளவு எளிது கிடையாது. இன்னொரு தேசிய விருதுக்காக பாலா இப்பவே ரெடியாகி விடலாம். அவ்வளவு உழைப்பு தெரிகிறது படத்தில்.



படம் முடிந்து வெளியில் வரும்போது, என்னுள் நிறைய கேள்விகளை எழுப்பியது. எவ்வளவு பேர் கொடுக்கிற சம்பளத்துக்கு ஒழுங்காக வேலை செய்கிறார்கள் ? வேலை சரியாகப் பார்க்காமல் ஓபி அடித்து விட்டு சம்பளம் ஒழுங்காக தர மாட்டேங்கிறார்கள் என புலம்பிக்கொண்டே அடுத்த கம்பெனி தாவத் துடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் தனது பரதேசி மூலம் சாட்டையடி கேள்வி கேட்டிருக்கிறார் பாலா. யாருக்கு உறைத்ததோ இல்லையோ (ஐ.டி.யில் இருக்கும்) எனக்கு நன்றாக உறைத்தது. அவ்வளவு கொடுமையையும் அனுபவித்தவர்கள் கதை, உண்மையிலேயே நடந்தது என்பதை நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. இன்னும் பல தேயிலைத்தோட்டங்களில் இது இன்னும் நடந்துகொண்டு தான் இருக்கிறது என்றும் கேள்விப்பட்டேன். அவர்களின் (இரத்தக்)கண்ணீர்க் கதையை ஒரு ஆவணமாகப் பதிவு செய்த இயக்குனர் பாலாவை தமிழ் சினிமா பெற்றதில் பெருமை கொள்வோம்.


பரதேசி – தமிழில் ஒரு உலக சினிமா

7 comments:

  1. நல்ல விமர்சனம் , இளையராஜா இருந்திருந்தால் “பரதேசியின்” தாக்கம் அப்படியே நம் மனதின் ஆழத்தில் பாய்ந்திருக்கும். அவரது பிண்ணனி இசையின் வீரியம் அப்படி. ஒவ்வொரு நிமிடமும் இந்த எண்ணம் தோன்றி படத்தின் திருஷ்டியாக அமைந்துவிட்டது ஜி.வி.யின் பிண்ணனி இசை. என்ன பாலா சார்..!! இளையராஜா இல்லாட்டியும் அட்லீஸ்ட் யுவனையாவது புக் பண்ணிருக்கலாம்.!! படம் இன்னும் பெரிய அளவில வந்திருக்கும். இப்போ பாதிக்கிணறு தான். எனக்கும் அதெ என்னம் தான்.

    ReplyDelete
    Replies
    1. இந்த பிளாக்-ல பின்னூட்டமிட்ட முதல் ஆள் நீங்கதான் நண்பா!!
      ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
      இந்தப் படத்துல இளையராஜா இல்லாதது மிகப்பெரிய குறைதான் நண்பா..!!

      உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஹேமந்த்.
      மீண்டும் வருக..!!

      Delete
  2. பரதேசி படம் பார்த்து ரொம்ப நாள் என் மனதை விட்டு அகலாம இருந்தது. ஆனா அது என்ன மாதிரியான ஃபீலிங் அப்படிங்கறதை உங்க விமர்சனத்தில் சரியா சொல்லியிருந்திங்க.

    ReplyDelete
    Replies
    1. கோவம் நல்லது,

      வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி நண்பா.. :)
      அதுசரி., அதென்ன பேரு "கோவம் நல்லது"னு வச்சுருக்கீங்க? அடிக்கடி கோவப்படுவீங்களோ ?? கூல்ல்ல்.. :)

      நட்புக்கும் அறிமுகத்துக்கும் மிக்க நன்றி நண்பா..!! அடிக்கடி வாங்க..!!

      Delete
  3. உங்க வலைப்பூவில் FOLLOWERS - ஆப்சன் இல்லையே ஏன்...?

    ReplyDelete
    Replies
    1. என்னா இப்புடி கேட்டுட்டீங்க ?
      கூகுள்+ ஃபாலோயர்ஸ் கீழே இருக்கே நண்பா ? அதுபோக ஃபாலோ பை மெயிலும் இருக்கே.
      ஒருவேளை "ஜாயின் திஸ் சைட்"னு இருக்கற பழைய ஃபாலோயர்ஸ் விட்ஜட்ட சொல்றீங்களோ? அதுக்கு பதிலா தான் இந்த கூகுள்+ ஃபாலோயர்ஸ் இருக்கு நண்பா.. அந்த பழைய ஃபாலோயர்ஸ் விட்ஜட் என்னோட லேஅவுட் விட்ஜட் லிஸ்ட்லயே இல்ல.. :(

      நம்ம தளத்தோட இணைந்திருக்க விரும்புனீங்கன்னா, கீழே இருக்க இந்த வழிகள்ல எதாச்சும் உபயோகிங்க.
      1.Follow By Email
      2.Subscribe To
      3.Like "Killadi Ranga - கில்லாடி ரங்கா" Facebook Page
      4.Add me as your friend in Google+
      5.Add me as your friend in Facebook
      6.இது எதுமே வாண்டாம்னா புக்மார்க் பண்ணிக்கோங்க நண்பா

      இந்த தளத்தின் மீதான உங்க ஆர்வத்துக்கு மிக்க நன்றி நண்பா..!! :)

      Delete
    2. நண்பா,

      "ஜாயின் திஸ் சைட்" விட்ஜட்டையும் கீழே போட்டாச்சு.

      மிக்க நன்றி. மீண்டும் வாங்க.

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *